மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்படுவோரை, அவர்தம் உறவினர்கள் மருத்துவமனையிலேயே தங்கி பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, தன்னார்வ அமைப்பினர் கடந்த 170 நாட்களுக்கும் மேலாக இலவச உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களாக இலவச உணவு வழங்கப்படவில்லை. பின்னர், இன்று மருத்துவமனை பாதுகாப்பு கருதி, மருத்துவமனைக்குள்ளே இலவச உணவு வழங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையின் வெளியே உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, உணவு சரியாக கிடைக்கவில்லை எனவும், மக்களுக்கு பயனுள்ள வகையில் இலவச உணவு வழங்குவதை அரசு மருத்துவமனை உயர் அலுவலர்கள் தடுத்து நிறுத்துவதாகவும், இதன் பின்புலத்தில் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் நடிகர் சூரியின் உணவக நிர்வாகத்தினர் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பழைய முறைப்படி மருத்துவமனை வளாகத்திலேயே இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.