சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் மருத்துவர் பி.கே.பழனி. இவர் தற்போது சென்னை எழும்பூரில் உள்ள குடும்ப நல மருத்துவ பயிற்சி மையத்தின் முதல்வராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், பழனி, காஞ்சிபுரத்தில் பணிபுரிந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவரால் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில், தற்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், ஆய்வாளர்கள் அண்ணாதுரை, கீதா மற்றும் போலீசார், இன்று காலை முதல் சென்னை நொளம்பூர், முகப்பேர் மூன்றாவது தெரு VGN நகர் பகுதியில் உள்ள மருத்துவர் பழனி வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பழனியின் வங்கியிலிருந்து பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட விவரங்களையும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சோதனையின் முடிவில் பணமோ அல்லது வேறு ஏதாவது ஆவணங்களோ சிக்கினால், அதற்கான விளக்கங்களைப் பெற பழனிக்கு சம்மன் அனுப்பி, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:“என் வீட்ல எதையாச்சும் வச்சுட்டு போய்டிங்கனா...” - ரெய்டுக்கு வந்த போலீசாரிடம் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி வாக்குவாதம்! - Youtuber Felix Gerald