சென்னை: ஆவணி மாத வளர்பிறையில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில், கேரள ராஜ்யத்தைப் பொற்காலமான அரசாக மாற்றி மாபலி சக்கரவர்த்தியை வரவேற்பதற்கா கூறி கேரள மக்கள் பாரம்பரியமாக கொண்டாடும் சிறப்பான பண்டிகையே ஓணம் திருநாளாகும்.
10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவின் நிறைவு நாளில் வீடுகள் தோறும் அத்தப்பூ கோலமிட்டு, ஓணம் சத்தியா விருந்து படைத்து, அனைவரும் ஒன்றாக கூடி பாரம்பரிய முறையில் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் இன்று (செப்.15) கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்: "ஓணம் பண்டிகை நேசத்துக்குரிய மரபுகள் மூலம் சமூகங்களை ஒன்றிணைக்கிறது. இரக்கம் மற்றும் தியாகத்தின் நீடித்த மதிப்புகளின் இதயப்பூர்வமான நினைவூட்டலாக செயல்படுகிறது. இந்த ஓணம் பண்டிகை அனைவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் நிரப்பட்டும்" என்று தனது 'X' வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அரசுப் பள்ளிகளில் AI படிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
பிரதமர் மோடி: "உலகம் முழுவதும் உள்ள மலையாளி சமூக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஓணம் வாழ்த்துக்கள். எங்கும் அமைதி, செழிப்பு, ஆரோக்கியம் நிலவட்டும். இந்த ஓணம் திருவிழாவில் கேரளாவின் புகழ்பெற்ற கலாச்சாரத்தை உலகம் முழுவதும் உள்ள மலையாளி மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது" என்று என்று தனது 'X' வலைதள பக்கத்தில் பதிவிட்டு தனது ஓணம் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: "உலகெங்கிலும் உள்ள எனது மலையாளி சகோதரர்களுக்கு இதயம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள். பெரும் இயற்கைப் பேரிடரின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம் நம்பிக்கையையும் வலிமையையும் தரட்டும். இந்த ஓணம் மலையாளிகளின் ஒற்றுமையையும் வாழ்வையும் பிரதிபலிக்கட்டும்" என்று மலையாள மொழியில், தனது 'X' வலைதள பக்கத்தில் பதிவிட்டு ஓணம் பண்டிகை வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: "ஓணம் பண்டிகையை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாபலி சக்கரவர்த்தியை, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நேர்மை, இரக்கம், தியாகம் ஆகியவற்றின் விழுமியங்களையும் நாம் கொண்டாடும் இவ்வேளையில், இந்த அறுவடைத் திருவிழா அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டு வந்து, நம் அனைவருக்கும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வைத் தூண்டட்டும்" என்று தனது 'X' வலைதள பக்கத்தில் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய்:நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், "மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்" என்று தனது 'X' வலைதள பக்கத்தில் பதிவிட்டு ஓணம் பண்டிகை வாழ்த்தை தெரிவித்துள்ளார்.