திருச்சி: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கொடியை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். மேலும், தவெக கட்சிக்கென பிரத்யேக பாடலையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கட்சிக் கொடி குறித்து பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார். முதலாவதாக பகுஜன் சமாஜ் கட்சி தவெக கொடியில் உள்ள யானையை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் கட்சியின் அண்ணா சரவணன், தவெக கொடியை மாற்ற வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "கடந்த 2016ஆம் ஆண்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வளர்ந்து வரும் எங்கள் கட்சி, முறைப்படி பத்திர பதிவுத்துறையில் இயக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் இயக்கத்தின் கொடியாக மேலும், கீழும் சிவப்பு வண்ணமும், நடுவில் மஞ்சள் வண்ணமும் இருக்கும்.
இதை எங்கள் நிகழ்வுகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளார். சமீபத்தில் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தினார். அது அப்படியே எங்கள் இயக்கத்தின் கொடியாக உள்ளது. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். நடிகர் விஜய் கட்சி துவங்கியதற்கும், கொடி அறிமுகம் செய்ததற்கும் இடையே 2 ஆண்டுகள் இடைவெளி இருந்தது. இந்த நேரத்தில் கட்சிக் கொடி, வண்ணம், சின்னம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
எத்தனையோ வண்ணங்களும், சினைங்களும் இருக்கையில், ஏற்கனவே வருபவற்றை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதனால் கட்சிக் கொடி வண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். எங்கள் அமைப்பு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கொடியை பயன்படுத்தி வருகிறோம். விஜய் தன் கட்சிக் கொடியின் வண்ணத்தை மாற்ற வேண்டும். இல்லையென்றால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்" என கூறியிருந்தார்.