சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சமூக விரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்த கொடூரத்தை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
அன்பு சோகோதரர் ஆம்ஸ்ட்ராங் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை வழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழ்நாட்டில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் ஆண்டுதோறும் ஏராளமான தோழர்களுடன் நாக்பூருக்குச் சென்று வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார்.