கோயம்புத்தூர்:கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜக மகளிர் அணி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.3) சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் ஹரியானா நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கல் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், “நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, கோவையில் பாஜகவின் மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மகளிர் அணியின் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நாளை நீலகிரி தொகுதியில் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. வரும் தேர்தலுக்கு மகளிர் அணியினை தயார் செய்யும் விதமாக, பல்வேறு மாவட்டங்களில் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநில அளவில் மகளிர் மாநாடுகள் நடத்தவும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
பாஜக கட்சி, மகளிர் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகளிர் அதிக அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பாஜக சார்பில் அதிக அளவில் மகளிர், வேட்பாளராக போட்டியிட வேண்டும் என கட்சிக்கு வலியுறுத்தியுள்ளோம்.
த.மா.க தலைவர் ஜிகே வாசன், பாஜக கூட்டணியில் அதிமுகவை இணைக்க தூது சென்றாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார். கட்சி சார்பில், யாரை தூதாக அனுப்புகிறார்கள் என்பது கட்சிக்குதான் தெரியும். எங்களால் கருத்து கூற முடியாது. அரசியல் கட்சி துவங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். மக்களுக்குப் பணி செய்வதற்காக அரசியல் களத்திற்கு வருவதாக கூறுகிறார். அவரை வரவேற்கிறோம்.
நாட்டு மக்களை வடக்கு, தெற்கு என பிரிக்காமல், அனைவரையும் ஒன்றிணைப்பதற்காகவே பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. கட்சியின் தலைமை, வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யும். பத்தாண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்ததோடு, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவிற்கு வெற்றி உறுதியாகி உள்ள நிலையில், மோடி பிரதமராக வேண்டும் என ஆதரவளிக்கும் அனைத்து கட்சிகளோடும் கூட்டணி வைக்க பாஜக தயாராக உள்ளது” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, சுனிதா துக்கல் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “உலகிலேயே பெரிய கட்சி பாஜக. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மகளிர் அணியை உத்வேகப்படுத்த இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. பா.ஜ.க அனைவரையும் ஒருங்கிணைக்கும் கட்சி. பிற கட்சிகள் மக்களை பிளவுபடுத்துகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:23 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: கவலையில் மீனவர்கள்..