விழுப்புரம்:உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அடுத்த நாகாவா ஸ்ரீவித்ய சாதனா பீட் பகுதியைச் சேர்ந்தவர் பிரமோத் சர்மா. இவரது மகள் சௌமியா(24). இவர் அரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் படித்தபோது திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த சித்தார்த் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சித்தார்த் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், சித்தார்த்தின் தாய் ஜெயந்தி சென்னையில் தனது சகோதரி வீட்டில் வந்து தங்கியிருந்தார். சௌமியாவும் பெங்களூருவில் உள்ள தந்து அக்கா அனுக்ரா சர்மாவுடன் தங்கி இருந்துள்ளார். ஜெயந்தியும், சௌமியாவும் கடந்த 22-ஆம் தேதி புதுச்சேரி வந்துள்ளனர்.
ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய இருவரும் புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் தியான கூடம், சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். கடந்த 24-ஆம் தேதி ஜெயந்தி சென்னைக்கும், சௌமியா பெங்களூருவுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி அன்று மதியம் ஜெயந்தி சென்னைக்கு சென்று விட்டார். சௌமியாவுக்கு பெங்களூருக்கு செல்ல இரவு தான் பேருந்து என்பதால் கெஸ்ட் ஹவுஸ் வரவேற்பு அறையிலிருந்துள்ளார். திடீரென அவர் ஏற்கனவே சென்று வந்த பிள்ளைச்சாவடி கடற்கரைக்கு செல்வதற்காக கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் சுரேஷ் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.
பின்னர், சுரேஷ், சௌமியாவை ஒரு பைக்கில் அங்கு அழைத்துச் சென்றதாகவும், மேலும், அதே விடுதியில் அறை எடுத்துத் தங்கி இருந்த ஒடிசா பகுதியைச் சேர்ந்த மணீஸ் மற்றும் டாக்டர் கணேஷ் மற்றொரு பைக்கில் கடற்கரைக்கு சென்றுள்ளனர். டாக்டர் கணேஷ் கடற்கரையில் அமர்ந்திருந்த நிலையில், சௌமியா மற்றும் கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் சுரேஷ் கடலில் இறங்கி குளித்தனர். கெஸ்ட் ஹவுஸில் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால் ஒடிசா பகுதியைச் சேர்ந்த மணீசும் அவர்களுடன் சேர்ந்து கடல் அலையில் குளித்து மகிழ்ந்துள்ளனர்.
ராட்சத அலையில் அடித்துச் சென்றதா?அப்போது, செளமியா கடல் அலையில் சிக்கி திடீரென மாயமானதால் பதற்றமடைந்த சுரேஷ் மற்றும் மணீஷ் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் செளமியாவை தேடினர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர்(பொறுப்பு) முத்துலட்சுமி மற்றும் போலீசார், செளமியா மாயமானது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் ஒருபுறம் செளமியாவை தேடும் பணி தொடர்ந்தது.