தூத்துக்குடி:சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,"பிரதமர் மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து இருக்கின்றார். இதனையடுத்து ஏழை, எளிய மக்களுக்காக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் மூன்று கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இரண்டாவது கையெழுத்தாக 20,000 கோடி ரூபாய்க்கு விவசாயிகளுக்கு சன்மான ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு 1,800 கோடி ரூபாய் கொடுத்து உள்ளார்கள். அதேபோல தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்துள்ளார்" என்றார்.
மேலும் 2047ஆம் ஆண்டு இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கடுமையாக உழைத்து வருகின்றார். தூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி ரயில் நிலையத்தை தரம் உயர்த்திக் கொண்டிருக்கின்றோம். தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்க பணியானது ஓடுதளம் 3 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. சென்னையை விட இதுதான் அதிகம், இதனால் அதிக விமானங்கள் தரை இறங்கக் கூடும்.