கோயம்புத்தூர்:நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனம் கோவை செல்வதற்காக ஊட்டியில் இருந்து புறப்பட்டது. காரில் எஸ்.பி. சுந்தரவடிவேல் இல்லை என்றும் காவலர் ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கல்லார் தூரிப் பாலம் அருகே காவல் கண்காணிப்பாளர் வாகனம் வந்து சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருச்சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருச்சக்கர வாகனத்தில் பயணம் செய்த இரு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். பின்னர், இருச்சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இதில் இருச்சக்கர வாகனம் முழுவதும் எரிந்தது. மேலும் காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தின் முன்பக்கம் சேதமடைந்தது. விபத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்களையும் அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.