சென்னை:சென்னை அம்பத்தூர் ஏழாவது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருபவர்கள் தங்கபாண்டி, பிரதீபா தம்பதி. தங்கபாண்டி அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை 4.30 மணி அளவில் தங்கபாண்டியின் இரண்டரை வயது மகள் யாஷிகா, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த தெரு நாய் ஒன்று குழந்தையின் மீது சீறிப்பாய்ந்து, யாஷிகாவின் கன்னத்தில் கடித்து குதறியது. வலி தாங்காமல் அலறி துடித்த யாஷிகாவின் சத்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்து ஓடி வந்த அவருடைய தாய் பிரதீபா, நாயிடம் சுமார் 20 நிமிடம் போராடி குழந்தையை மீட்டார்.
அதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த யாஷிகாவை, அக்கம் பக்கத்தினரின் உதவியோடு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு குழந்தையின் கன்னத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்க உள்ளதால், அதற்கு முன்னதாகவே சாலையில் சுற்றி திரியக்கூடிய தெரு நாய்களை பிடித்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.