கோயம்புத்தூர்:மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டுப் பன்றி மற்றும் முயல் வேட்டைக்காக வைக்கப்படும் 'அவுட்க்காய்' எனப்படும் நாட்டு வெடியைக் கடித்து கால்நடைகள் மட்டுமன்றி யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் பலத்த காயமடைவதுடன், சில சமயங்களில் அவை உயிரிழக்க நேரிடுகின்றன.
இதனை தடுக்கும் வகையில் கோவை வனக் கோட்டத்தில் ஒட்டி உள்ள கிராமங்களில் திடீர் சோதனை மேற்கொள்வது, சந்தேகப்படும்படியான நபர்களின் வீடுகளில் அதிகாரிகளின் அனுமதியோடு சோதனையிடுவது என தொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) மதுக்கரை வனச்சரகம் உட்பட்ட கரடிமடை பிரிவு பூலுவபட்டி கிராமம் அடுத்த வெள்ளி மேடு பகுதியில் வசிக்கும் ராமசாமி என்ற கருஞ்சி என்பவர் வீட்டில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படும் நாட்டு வெடி குண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் படி மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வனவர் மற்றும் வனப்பணியாளர்கள் ராமசாமி என்பவர் வீட்டில் சோதனை செய்ய முடிவு செய்தனர்.