சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று (ஆகஸ்ட் 25) ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் வேலை பார்த்து கொண்டே படிக்கும் மாணவ, மாணவிகளின் சிரமங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய கோவில்பட்டியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவன், "நான் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக மூட்டை தூக்கி வருகிறேன். அவ்வாறு தூக்கும்போது எனது தோள்பட்டையில் வலி அதிகமாக இருக்கும், அதை நான் வீட்டில் கூற மாட்டேன்" என்றார்.
மேலும், "நான் தொடர்ந்து மூட்டை தூக்குவதால் எனது கழுத்துப் பகுதி வலி காரணமாக சாய்ந்தவாறு இருக்கும். எனது குடும்ப சுமை காரணமாக நான் வேலைக்கு செல்கிறேன். ஒருநாளைக்கு குறைந்தது 5 மணி நேரம் வேலை செய்வேன். இரவில் சில நேரங்களில் பேருந்து இல்லையென்றால் வீட்டிற்கு 3 கி.மீ., நடந்தே செல்வேன். எனது அம்மா வீட்டில் மெத்தை இல்லாமல் தூங்குகிறார். அவருக்கு ஒரு மெத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும், நான் படித்து நல்ல வேலைக்கு சென்று எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்" என்றார்.
மாணவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், இந்த மாணவரின் குடும்பத்தினருக்கு தவெக கோவில்பட்டி நிர்வாகிகள் மூலமாக உதவி செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவரின் தாயார் வீடியோவில் பேசுகையில், "எனது மகன் நிகழ்ச்சியில் பேசியதை கேட்டு, தவெக தலைவர் விஜய் எங்கள் மகனின் கல்லூரி படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக கூறி, எங்களுக்கு 25 ஆயிரம் பணமும் வழங்கியுள்ளனர்.