சென்னை: தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் நடிக்கும் படங்கள் கோடிகளில் வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
நடிகர் விஜய் இது தொடர்பாக மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு, தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தார். மேலும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்துச் செயல்படப் போவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும், அதனைத் தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.
மேலும், இரண்டு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 100 பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளார். மேலும் அடுத்த வாரம் செயலி தொடக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் தனது X தளத்தில் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.