தஞ்சாவூர்: தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை எனவும், இந்த இயக்கத்தை எந்த நோக்கத்துக்காக தொடங்கினோமோ, அந்த காரணத்தில் எந்த விதத்திலும் அணு அளவு மாற்றம் இல்லை என்றும் தெரிவித்தார்.
அதிமுகவில் தவறான தலைமை உள்ள நிலையில் அங்கு இணைவது குறித்து கேட்பது தவறான கேள்வி என்றும், அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து உண்மை நிலையை உணர்ந்து நல்ல முடிவை எடுக்கும் போது, அது பற்றி நாங்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம் என தெரிவித்தார். ஒரு சில சுயநலவாதிகளின் எண்ணத்தால் ஜெயலலிதாவின் கட்சி அழிக்கப்பட்டு வருகிறது எனவும், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால், ஜெயலலிதாவின் தொண்டர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், அதிமுகவுக்கு 2019ஆம் ஆண்டில் 20 தொகுதிகளில் பெற்ற வாக்கு வீதத்தில் இந்தத் தேர்தலில் குறைந்துள்ளது எனவும், திமுகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.