தேனி:நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடித்தார். இந்நிலையில், தேர்தலில் தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்றது.
இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமமுக முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பேசியதாவது, “தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் போதை, கஞ்சா பழக்கங்களைப் போன்று தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறும் கலாச்சாரம் பரவி வருகிறது. வேட்பாளர்கள் வெற்றி பெற ஓட்டுக்கு 500, 1,000 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்ற பின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தங்கள் முதலீடு செய்த பணத்தை அறுவடை செய்யும் வேலை செய்து வருகின்றனர்.
தேர்தலில், திமுக வெற்றி பெற்றால் தேனி தொகுதியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து தங்குவேன் என்று உதயநிதி கூறினார். தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் ஆகிறது இன்னும் வரவில்லை. இந்தப் பகுதி மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காகவே தேனியில் வீடு எடுத்து தங்கி உள்ளேன். தேனி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தீய சக்தி திமுகவை வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு தோல்வியை பரிசாக கொடுக்க வேண்டும்.
கலைஞர் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் வரவேண்டும் என தவமிருந்து, அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்தனர். மத்திய அரசிடமும், பாஜக தலைமையிடமும் திமுக அரசு மண்டியிட்டு இருக்கின்றது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் திமுக எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. கல்வி செல்வம் தான் யாராலும் அழிக்க முடியாத செல்வம், அதை மாணவர்கள் படித்து உயர வேண்டும் என கூறிவிட்டு, பள்ளிகளில் புத்தகத்தின் விலையை உயர்த்தி விட்டனர்.