திருச்சி:திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியில் இயங்கி வரும் பேக்கரி ஒன்றில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தொடர் புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் பேரில், திருச்சி மாவட்டம் தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரிகளில் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் போது, தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் இருக்கும் இரண்டு பேக்கரிகளில் நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து, கேக் மற்றும் பிரட் தயார் செய்வதற்கு பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
அழுகிய முட்டைகளில் கேக்:இதையடுத்து, சுமார் 8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் அழுகிய முட்டைகளைக் கொண்டு தயார் செய்த 215 கிலோ பேக்கரி உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. பின் அந்த பேக்கரிகளின் உணவு பாதுகாப்பு உரிமத்தையும் அதிகாரிகள் ரத்து செய்து, தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு கடைக்கு சீல் வைத்தனர். மேலும், இந்த பேக்கரிகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவு 58இன் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதை சாக்லெட் விற்ற வேலையில்லா பொறியியல் பட்டதாரி கைது!