விழுப்புரம்: தமிழ்நாடு அரசில் காலியாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு நாளை(ஜூன் 9) நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தோ்வை எழுத விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில் குரூப்- 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ரமேஷ், திருக்கோவிலூா் வருவாய் கோட்டாட்சியா் ரெ.கண்ணன் உள்ளிட்டோா் பங்குபெற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 41,618 பேர் இந்த தேர்வினை எழுத உள்ளனர். கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட 5 வட்டங்களில் 138 மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், விழுப்புரம் மாவட்டத்திலும் டிஎன்பிஎஸ்சி தோ்வு தொடா்பாக அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம்- 26,578, செஞ்சி-6,619, கண்டாச்சிபுரம் -2,748, மரக்காணம்-2,007, மேல்மலையனூா்-1,900, திருவெண்ணெய்நல்லூா்-3,777, திண்டிவனம்-10,361, வானூா்-5,381, விக்கிரவாண்டி-4,725 என 9 வட்டங்களிலும் சேர்த்து 64,106 போ் இத்தேர்வினை எழுத உள்ளனா்.