கரூர் : தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் நவ.12ம் தேதியன்று ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அனைத்து துறைகளிலும் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு, திமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திமுக அரசு அமைந்த ஓராண்டு நிறைவு நாளில் தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பினால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் நடைபெற்ற தமிழக அமைச்சரவை மாற்றம், நாடாளுமன்றத் தேர்தல் என திமுக ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், அரசு ஊழியர்கள் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் கடந்த நவ 8ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டதாக கூறப்பட்டது.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதலமைச்சரை எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர வைப்போம் என தெரிவித்து அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று( நவ 10) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.