திருநெல்வேலி: தமிழக அரசின் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கோயம்புத்தூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
அப்பாவு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) திருநெல்வேலி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி ஏடிஎம் கார்டை வழங்கினார். திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 6,361 மாணவர்கள் முதல் கட்டமாக இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், "நமது மாவட்டத்தில் 69 கல்லூரிகளில் 6,361 இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள். மாணவர்களிடையே மோதல் தொடர்பான கேள்விக்கு, பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இடையே சின்ன, சின்ன பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.
இராதாபுரத்தில் ஒரு பள்ளியில் பிரச்னை செய்த மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தபோது மாணவர்களின் பெற்றோர், 'எங்கள் பிள்ளைகள் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள் இன்று சண்டை போட்டால் நாளை சேர்ந்து கொள்வார்கள்; எனவே ஏன் பெரிதுப்படுத்துகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். நமது மாவட்டத்தில் எங்கேயும் சாதிய ரீதியான சண்டை இல்லை. அப்படி இல்லாததால் பள்ளியில் குழந்தைகள் சண்டை போடுவதை பெரிதாக்க பார்க்கிறார்கள். மாணவர்கள் பிரச்னையில் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ தலையிடக்கூடாது. தலைமை ஆசிரியர் தான் முடிவுடுக்க வேண்டும்.
பள்ளியில் நடந்த சம்பவங்களை அவர்களே முடிவெடுத்து கொள்வார்கள். பள்ளிக்கு வெளியே வேறு நோக்கத்தோடு பிரச்னை நடந்தால் அதில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் தலையிடலாம். ஆசிரியர்கள் தான் குழந்தைகளை அரவணைத்துச் செல்ல முடியும். தவறுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மாணவர்களை தண்டிக்கலாம், இடைநீக்கம் செய்யலாம், நிரந்தரமாகவும் நீக்கலாம்" என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
அதிமுக நிர்வாகி தொடுத்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட்டிருப்பது குறித்து கேள்விக்கு, "காவல்துறை அழைத்தால் விசாரணைக்கு செல்வேன். நீதிமன்றத்திற்கு சென்றால் சட்டப்படி ஆஜராகி எனது தரப்பு நியாயத்தை தெரிவிப்பேன்; அதில் ஒன்றும் வருத்தமில்லை. இது நம்ம நாடு, நமது சட்டம். நமது மக்கள், நமது ஜனநாயகம்; அப்பாவுக்கும் ஒன்று தான் உங்களுக்கும் ஒன்றுதான். எல்லோருக்கும் சமமானது சட்டம். எனவே சட்டத்தை மதித்து நடப்பேன்" என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:'தமிழ்ப் புதல்வன்' திட்டம் துவக்கம்.. உடனடியாக மாணவர்கள் வங்கிக் கணக்கில் வந்த ரூ.1000 - Tamil Pudhalvan Scheme