சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தாம்பரம் காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது, ரயிலில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த மூன்று நபர்களிடமிருந்து சுமார் 4 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், கைப்பற்றபட்ட பணத்திற்கு எந்த ஒரு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த சதீஷ், நவீன் மற்றும் பெருமாள் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் இருந்து பணம் கொண் டுவரப்பட்டதாகவும், இது நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும், தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் சேர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி, சென்னை அபிராமிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் பாஜக நிர்வாகி கோவர்தனுக்குச் சொந்தமான ஒரு ரெஸ்டாரண்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட நான்கு கோடியில் ஒரு கோடி ரூபாய் பணம் அந்த ரெஸ்டாரண்டில் வைத்து கைமாற்றப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் துறையினர் பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு சம்மன் அனுப்பியதன் அடிப்படையில், அவரது மகன் கிஷோர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி, தங்களுக்கும், தங்கள் ஓட்டலுக்குள் கைமாற்றப்பட்ட பணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என வாக்குமூலம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஏப்ரல் 22ஆம் தேதி நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், நயினார் நாகேந்திரனின் வழக்கறிஞர் ஜெயகர் டேவிட் என்பவர், தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி, நயினார் நாகேந்ந்திரன் அவரது சொந்தக் காரணங்களுக்காக விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் கால அவகாசம் கேட்டிருப்பதாகக் கூறி, கடிதம் ஒன்றை காவல் ஆய்வாளர்களிடம் கொடுத்தார்.
இதையடுத்து, நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி, தனது வாக்குமூலத்தை அளித்தார். அவர் தனக்கும், ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் கூறிய தகவலின் அடிப்படையில், ஜெய்சங்கர் ஆசைத்தம்பி நான் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்த, மே 2ஆம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், தாம்பரம் காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோணத்திலும், இந்த வழக்கு சிபிசிஐடி வரைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நயினார் நாகேந்திரன் இது தனக்குச் சொந்தமான பணம் இல்லை என கூறப்பட நிலையில், அவரது உதவியாளர் மணிகண்டன் கொடுத்து அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், இந்த வழக்கை தீவிர விசாரணை செய்வதற்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:"என் ஆளுங்க தான் ஆனால் பணம் என்னுடையது இல்லை"- நயினார் நாகேந்திரன் கூறுவது என்ன? - Nainar Nagendran