தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை ஏற்பு! வேங்கைவயல் வழக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்! - VENGAIVAYAL CASE

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஏற்றது. மேலும் வழக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

வேங்கைவயல் குடிநீர் தொட்டி, புதுக்கோட்டை நீதிமன்றம் - கோப்புப்படம்
வேங்கைவயல் குடிநீர் தொட்டி, புதுக்கோட்டை நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2025, 4:32 PM IST

புதுக்கோட்டை:வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற மனுவை தள்ளுபடி செய்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கையை ஏற்றதோடு இந்த வழக்கை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ளது வேங்கைவயல் கிராமம். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மனிதக் கழிவு கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் குடிக்கும் நீரில் மனிதக் கழிவை கலந்த கொடூரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் கடந்த 20-ஆம் தேதி ஆன்லைன் மூலமாக குற்றப் பத்திரிக்கையை புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் வேங்கைவையல் கிராமத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த குற்ற பத்திரிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் அதனை ஏற்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் சார்பிலும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல் சிபிசிஐடி போலீஸாரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாற்ற வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே முடிந்த நிலையில், இரு தரப்பினர் மனுக்கள் மீது வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி இன்று தீர்ப்பளித்தார். அதில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை ஏற்று இந்த வழக்கை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் புகார்தாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த மனுவை ஏற்பதற்கு போதிய முகாந்திரம் உள்ளதால் சிபிசிஐடி போலீசாரின் குற்றப்பத்திரிக்கையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி புகார்தாரர்கள் தரப்பு கேட்ட குற்றப்பத்திரிகை நகலை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details