சென்னை:பிரபல யூடியூபர் இர்பான் தனது குழந்தைக்கு தொப்புள் கொடியை அறுவை சிகிச்சை அரங்கில் வெட்டிய விவகாரத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ தனியார் மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 நாட்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவத் துறை தடை விதித்துள்ளது.
யூடியூபர் இர்பான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் துபாய் சென்றபோது, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவமனையில் சோதித்து, அதனையும் யூடியூபில் வீடியோவாக வெளியிட்டார். இந்த விவகாரத்தில் மருத்துவத்துறை விளக்கம் கேட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத் துறை கைவிட்டது. இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்து, குழந்தையின் தொப்புள் கொடியையும் தானே வெட்டும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.