சென்னை:போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மாதம் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த, 14 பேர் கொண்ட குழுவை அமைத்து, போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் நிதித்துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை, கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்ட நோட்டீசை ஏற்கனவே வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால், கடந்த ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதிகளில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின், நீதிமன்ற அறிவிறுத்தல் அடிப்படையில், போக்குவரத்து துறை சங்கமானது தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது .