சென்னை: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமருடன் விவாதிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் அதிகாரிகள் மற்றும் எம்பிககள் உடன் செல்ல உள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்றார். அங்குள்ள பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 14 ஆம் தேதி சென்னை திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், இந்த பயணத்தின் மூலம் ரூ.7,618 கோடிக்கு 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகவும், இதன்மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் சந்தித்து வந்துள்ளனர். இதுகுறித்து பிரதமரிடம் உடனடியாக நேரம் கேட்டு அதுகுறித்து வலியுறுத்த இருக்கிறேன். தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி குறித்து விவாதிக்க பிரதமரை விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு எஸ்எஸ்ஏ (Samagra Shiksha Scheme) திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சியாகவும், தலைவணங்க மறுத்ததற்காகவும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை பாஜக மறுக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.