சென்னை: சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”ஒரு இயக்கம் 75 ஆண்டுகாலம் நிலைத்து நிற்பதும், ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாகக் காட்சி அளிப்பதும் சாதாரணமான சாதனை இல்லை. இதற்கு முழுமுதல் காரணம் நமது அமைப்புமுறைதான் என்பதை நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவேன்.
கடந்த 1977ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்றபோது, “இத்துடன் திமுக முடிந்தது” என சில ஊடகங்கள் எழுதினார்கள். அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சொன்னார். “கருணாநிதியின் வாழ்வே முடிந்துவிட்டாலும், திமுகவின் வாழ்வு முடியாது என்ற அளவுக்கு வலிமை வாய்ந்த அமைப்புமுறையைக் கொண்டது" என சொன்னார்.
இந்த தருணத்தில் ஒரு முக்கியமான செய்தியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 25 வயதைக் கொண்டாடும் வெள்ளி விழா ஆண்டிலும், 50 வயதை கொண்டாடும் பொன்விழா ஆண்டிலும், 75 வயதைக் கொண்டாடும் பவளவிழா ஆண்டிலும் திமுக ஆட்சியில் இருந்தது, இருக்கிறது. நூற்றாண்டு விழா கொண்டாடும் போதும் திமுக நிச்சயம் ஆட்சியில் இருக்கும்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேவை, இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறது. கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம்.
- தாய்த் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினோம்.
- பல்லாயிரம் ஆண்டு பழமை கொண்ட நம் தாய்மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தோம்.
- ஆதிதிராவிடர் – பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் – பெண்கள் – உழவர்கள் – நெசவாளர்கள் என விளிம்புநிலை மக்களைக் – கல்வியில், வேலைவாய்ப்பில் உன்னத இடத்துக்கு உயர்த்தினோம்.
- எத்தனையோ பள்ளிகள் – எத்தனையோ கல்லூரிகள் – எத்தனையோ பல்கலைக்கழகங்கள் அத்தனையும் நாம் உருவாக்கியது.
- சாலைகள், பாலங்கள், அணைகள், நவீன நகரங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள் என உள்கட்டமைப்பு வசதிகள் எல்லாவற்றையும் உருவாக்கித் தமிழ்நாட்டை நோக்கி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் எத்தனை சாதனைகள்.
- மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை.
- உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.
- பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம்.
- பணிக்குச் செல்லும் மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து.