ஸ்பெயின்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு விமானத்தில் செல்லும் போது டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்குக் கடந்த சனிக்கிழமையன்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில் ஸ்பெயின் செல்லும் போது விமானத்தில் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சை சந்தித்துள்ளார். அவரை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “வானில் ஒரு ஆச்சரியம்: டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை ஸ்பெயின் செல்லும் போது சந்தித்தேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக ஸ்பெயின் செல்லும் முன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “திராவிட மாடல் அரசின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சியில் 2024ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்குச் செல்கிறேன். பிப்ரவரி 7ஆம் தேதி காலை சென்னை திரும்புவேன். கடந்த 2022ஆம் ஆண்டு தொழில் முதலீட்டுக்காக ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றேன். அதேபோல 2023ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்றேன்.
இந்த இரண்டு பயணங்கள் மூலமாக 7 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஸ்பெயின் பயணத்தின் போது ரோகா மற்றும் கெஸ்டாம்ப் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:செங்கல்பட்டு, திண்டிவனம் வழி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்! எப்போதிலிருந்து தெரியுமா?