தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் தனி ஆளாக கொடி ஏற்றிய மேயர்! விழாவை புறக்கணித்த கவுன்சிலர்கள்

DMK councilors boycott Republic Day: நெல்லை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் திருநெல்வேலி மாமன்ற உறுப்பினர்கள் குடியரசு தின விழாவை சுயநலத்தோடு புறக்கணித்ததாக மேயர் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்

நெல்லை திமுக கவுன்சிலர்கள் குடியரசு தின விழாவை சுயநலத்தோடு புறக்கணித்ததாக குற்றச்சாட்டு
நெல்லை திமுக கவுன்சிலர்கள் குடியரசு தின விழாவை சுயநலத்தோடு புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 9:29 AM IST

நெல்லை திமுக கவுன்சிலர்கள் குடியரசு தின விழாவை சுயநலத்தோடு புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 உறுப்பினர்களில், திமுக மட்டும் 44 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதில் மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன், துணைமேயராக ராஜூவும் பதவி வகித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக மேயர், மாமன்ற உறுப்பினர்கள் இடையே மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாமன்ற கூட்டத்திலேயே இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது.

இதனிடையே கடந்த 12ஆம் தேதி மேயருக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், வாக்கெடுப்பு மற்றும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் தலைமையிம் அறிவுறுத்தலின் படி திமுக உறுப்பினர்கள் வெளியூர்களுக்கு அழைத்து செல்லப்பட்டதால் யாரும் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, அதனால் மேயர் பதவி தப்பியது. இந்நிலையில் 75வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி குடியரசு தின விழாவில் ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமையில், துணை மேயர் ராஜூ முன்னிலையில் மேயர் சரவணன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக மாமன்ற உறுப்பினர் ஒரே ஒரு நபர் மட்டுமே கலந்து கொண்டார். அதிமுகவை சேர்ந்த மூன்று பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழா கொடியேற்றத்தின் போது மேயர் சரவணன் கொடியேற்றி வைத்த பிறகு அவர் பேசத் துவங்கியதும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலைந்து சென்றனர். நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவை மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து மேயருக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டியதாக தெரிகிறது.

மேயர் மீது கட்சி ரீதியாக ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கூட நாட்டின் தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவை சுய நலத்தோடு கவுன்சிலர்கள் புறக்கணித்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கட்சித் தலைமை சமாதானம் பேச முயற்சித்த பிறகும் மேயர், மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான மோதல் முடிவுக்கு வரவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. வரும் 30ஆம் தேதி மாநகராட்சியில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் மேயர், மாமன்ற உறுப்பினர்களிடையேயான மோதல் எதிரொலிக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் அதே வேலையில் மண்டல அலுவலகங்களில் நடந்த குடியரசு தின விழா நிகழ்வுகளில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருநெல்வேலியில் குடியரசு தினத்தையொட்டி கருப்புக் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்..!

ABOUT THE AUTHOR

...view details