திருவாரூர்:அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்ற பெண் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அதற்காக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் ஊர் மக்கள் பேனர் வைத்து, அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கமலா ஹாரிஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஸ்டெனோகிராபராக இருந்தார். அதன் தொடர்ச்சியாக, சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி.கோபாலனை அனுப்பி வைத்துள்ளது.
அப்போது ஷாம்பியா நாட்டுக்குச் சென்றவர், குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறியுள்ளார். பி.வி.கோபாலனின் இரண்டாவது மகளான சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். வழக்கறிஞராக பணியாற்றிய கமலா அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிஃபோர்னியா மாகாணத்தின் முதல் பெண் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
அரசியலில் வளர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்த நிலையில், வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், இரண்டாவது முறையாக ஜோபைடனுக்கு ஜனநாயக கட்சி சார்பில் வாய்ப்பு கிடைத்தபோதும், அவரது கட்சி தொண்டர்கள் ஜோ பைடனுக்கு வயதாகி விட்டதாகக் கூறி வேட்பாளரை மாற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதனால், ஜோ பைடன் தானாக முன்வந்து போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் என்ற கிராமத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு, அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்து தெரிவித்து பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். தற்போது இந்த பேனர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "தமிழ்நாடும் இல்லை.. திருக்குறளும் இல்லை.."- நாடாளுமன்றம் முன் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!