தமிழ்நாடு

tamil nadu

17 நாட்கள் அமெரிக்க பயணத்தில் ரூ.7,616 கோடி முதலீடு.. முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முழு விபரம்! - tn cm signed mou in america trip

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 8:54 PM IST

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவர் இதுவரை அங்கு மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றி விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.

லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட முதலமைச்சர்
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட முதலமைச்சர் (Credits - MK Stalin X Page)

சென்னை : இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்கும் நிலையில் தமிழகத்தில் புதிய மற்றும் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை, திமுக தலைமையிலான அரசு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் உள்ள உலகின் பல முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் 18 உலகின் முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 29 சான் பிரான்சிஸ்கோ :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27ம் தேதி துபாய் வழியாக அமெரிக்கா சென்ற நிலையில் கடந்த 29ம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோ சிப் டெக்னாலஜி, இன்ஃபிங்க்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்லைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை கோவை மற்றும் மதுரையில் சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆகஸ்ட் 30, கலிபோர்னியா : கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசினார். அந்த பேச்சுவார்த்தையின் போது கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆகஸ்ட் 31 : ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

செப் 3 சிகாகோ:சான் பிரான்சிஸ்கோ பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர், அதனைத் தொடர்ந்து சிகாகோ நகரில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது சிகாகோ நகரில் ஈட்டன் நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஈட்டன் கார்ப்ரேஷன் (Eaton) நிறுவனத்தின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் மற்றும் அமெரிக்க நாட்டின் ஓஹிகியோவின், பீச்வுட் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ரூ.200 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பண்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், அஷ்யூரண்ட் நிறுவனத்திற்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே, அஷ்யூரண்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க :சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின்; BNY மெலன் வங்கி உயர் அலுவலர்களுடன் பேசியது என்ன?

செப் 4 சிகாகோ :டிரில்லியண்ட் நிறுவனம், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தி அலகு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையத்தை நிறுவிட ரூ.2000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. உலகின் முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனமான Nike உடன் காலனி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு தயாரிப்பு உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையம் நிறுவுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

செப் 5 சிகாகோ :Lincoln - லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் - தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், விஷய் பிரிஷிஷன் (Vishay Precision) நிறுவனத்துடன் ரூ.100 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் (Sensors and Transducers) உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், விஸ்டியன் (Visteon) நிறுவனத்துடன் ரூ.250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் என மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

செப் 6 சிகாகோ :BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

செப் 9 சிகாகோ :ஜாபில் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி முதலீட்டில் ஐந்தாயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் ரூ.666 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கும் மற்றும் ஆட்டோ டிஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டி தன்மையை மேம்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

செப் 10 சிகாகோ :சிகாகோவில் ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, IT Serve Alliance கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

செப் 11 சிகாகோ :கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆஃப் ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு இயந்திரங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான கேட்டர்பில்லர் (Caterpillar Inc) நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டில் திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போது உள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

செப்.12 சிகாகோ:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 12.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோவில், RGBSI நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சரின் இந்த அமெரிக்க பயணத்தின் போது உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன், ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் புறப்பட்டார். அவரை தமிழ்ச்சங்கம் உற்சாகமாக வழியனுப்பி வைத்தது. நாளை 14ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details