தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சோழபுரத்தையடுத்துள்ள மானம்பாடி கிராமத்தில், கடந்த 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கட்சிப் பிரமுகர் இல்ல புதுமனை புகுவிழாவில் பங்கேற்க இயலாத சூழலில் இன்று (செப்.19) அந்த கட்சிப் பிரமுகரின் இல்லத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார்.
திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விடுதலை சிறுத்தைகள் கட்சி 1999ல் துவங்கப்பட்ட போதே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தோடு தான் தொடக்கப்பட்டது. எனவே 25 ஆண்டுகளை கடந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டுமல்ல, நூற்றாண்டுகளை கடந்த காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இவை நன்கு தெரியும்.
எனவே, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, எதை, எப்படி, எப்போது பேச வேண்டும் என்பது நன்கு தெரியும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பேச வேண்டிய விசயங்களை, கூட்டணிக்கு வெளியில் இருக்கும் கட்சிகள் பேசுவது ஏற்புடையதல்ல. இது சூது, சூழ்ச்சி, நிறைந்த அரசியல். திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சில கட்சிகள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எதை எதையோ பேசி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பள்ளியில் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம்: அமைச்சர் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு!
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இது அவர்களின் உட்கட்சி விவகாரம், அவர்களுக்கு அதற்கான சுதந்திரமும், உரிமையும் உள்ளது. அதிகாரத்தை யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் மாற்றிக் கொடுக்கலாம். இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை" என்று பதிலளித்தார்.
மேலும், கருணாநிதி குடும்பத்தின் அடிமை தான் திமுக என்ற ஹெச்.ராஜாவின் கருத்து குறித்து கேட்டதற்கு, "இது வயிற்றெரிச்சல், தமிழக அரசியலில் தங்களுக்கான வாக்கு வங்கியை பெற முடியாத நிலையில், ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாததால் புலம்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தின் கல்வித் தரம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து குறித்து கேட்ட போது, "தமிழக மக்களின் நம்பிக்கையினை சீரழிக்கும் செயல் திட்டத்தின் ஒருபகுதி தான் இது. சிறப்பான உயர்கல்வி தரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மருத்துவம், பொறியியல் கல்வி கற்க பல வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தமிழகத்திற்கு வருவதே இதற்கு சான்று. ஆளுநர் ஆர்.என்.ரவி தான் ஆளுநர் என்பதை மறந்து அரசியல் பேசி வருகிறார். அவர் அரசியலை தவிர்த்து ஆளுநராக செயல்படுவது நன்று" என்று தெரிவித்தார்.