திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் கூவம் கரையை ஒட்டிய மேடான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில், வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாகவும் கூறி, இங்குள்ள குடியிருப்புகளை அதிகாரிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவேற்காடு கூவம் நதி ஓரம் அமைந்திருக்கும் குடியிருப்புகளை விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவேற்காடு நகராட்சி பெருமாள் கோயில் தெரு பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்கள், பீதியிலே உறைந்து நிம்மதியற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.
2005ல் இருந்து தொடர்ச்சியாக இப்பகுதியினை அதிகாரிகள் அகற்றப் போகிறார்கள் என்ற செய்தி பரவுவதும் அதனால் மக்கள் பீதி அடைவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. கூவம் ஆற்றின் கரைப்பகுதியில் ஏறத்தாழ 30 அடி உயரத்தில் தான் இந்த குடியிருப்புகள் உள்ளன.
ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் 20 - 30 வீடுகள் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டுள்ளன. அந்த வீடுகளை இடுப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் 30 அடி உயரத்தில் உள்ள 300 வீடுகளை இடிக்க அதிகாரிகள் முயற்சிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.