சென்னை:"திராவிடம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்பு தான் முதல் கொள்கை. அதற்கு அவர்கள் கையில் எடுத்தது பிராமணர்கள் எதிர்ப்பு. பொய்யான காரணங்களை கூறி சமுதாயங்களை பிளவுபடுத்துவதே அவர்களின் நோக்கம்,"என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்
பிராமண சமூகத்தின் மீது தொடர்ந்து வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பிராமண சமூகத்தை சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாபெரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜன், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில துணை தலைவர் கரு. நாகராஜன், "இந்த ஆர்பாட்டம் ஒரு இனத்தின் எழுச்சியாகும். தமிழகம் ஆன்மீக பூமி என இந்த நிகழ்வு நிரூபித்து காட்டுகிறது. இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் திராவிட மாடல் என சொல்லுவதே வெட்கமாக உள்ளது. அதனை தமிழக மாடல் என சொன்னாலும் பரவாயில்லை. தமிழகம், தமிழக மக்களை அழிக்கும் வகையில் உருவானதே திராவிட மாடல்" என்றார்.
ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், "அந்தண சமூகத்தையும் அந்தண பெண்களையும் அவதூறாக பேசுவது அதிகரித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலோடு இது நடக்கிறதா என்பது தெரியவில்லை. ஏனென்றால் அவரது வீட்டிலேயே சனாதனம் உள்ளது. எந்த சமூகத்தை யார் அவதூறாக பேசினாலும் PCR சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு பாடபுத்தகத்தில் இருந்து ஆரிய திராவிட கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும்,"என்றார்.
பின்னர் பேசிய நடிகை கஸ்தூரி, "அமரன் என திரைப்படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். ஐயர், ஐயங்கார் என சொல்லாமல் என்றும் அழியாத பொருளான அமரன் என அவர்களை அறியாமலேயே படத்திற்கு பெயர் வைத்து இருக்கிறார்கள். திராவிடம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்பு தான் முதல் கொள்கை. அதற்கு அவர்கள் முதலில் கையில் எடுத்தது பிராமணர்களை எதிர்ப்பதுதான். பொய்யான காரணங்களை கூறி சமுதாயங்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். யார் வந்தேறி என ஆராய்ச்சி செய்தால் திமுகவின் ஓட்டு பிரிந்துவிடும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்