திருநெல்வேலி: வங்கக்கடலில் புயல் உருவான சூழலில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குமரி கடலில் உருவான கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை நீடிக்கிறது.
இதற்கிடையில் புயல் உருவானதால் நேற்று முன்தினம் (மே 23) முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை நெல்லையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. அந்தவகையில் பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு: இன்று (மே 25) காலை ஏழு மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான நாலுமுக்கில் அதிகபட்சம் 72 மி.மீ, ஊத்து பகுதியில் 67 மி.மீ, காக்காச்சியில் 47 மி.மீ, மாஞ்சோலையில் 26 மி.மீ என மழையின் அளவு பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் சராசரியாக 494.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் அருகே காரையாறு அணை மணிமுத்தாறு போன்ற அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
அணைகளின் நீர்வரத்து: கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 500 கன அடிக்கு கீழே அணைகளுக்கு தண்ணீர் வந்த நிலையில், நேற்று (மே 24) பாபநாசம் அணைக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக அதிகரித்து நீர்மட்டம் 52 அடியில் இருந்து 57 அடியாக அதிகரித்ததுள்ளது.