தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான முறைகேடு வழக்கு; மீண்டும் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி! - MADRAS HIGH COURT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் மற்றும் பொன்முடி
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 3:51 PM IST

சென்னை: கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரையில் இருந்த திமுக ஆட்சியில் சென்னையில் உள்ள பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில் சுமார் 115 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, கடந்த 2001ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தற்போதைய அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கை விசாரணை செய்ய அரசு ஒப்புதல் வழங்கி 2005ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், 2006ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின், மு.க.ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்து 2005ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு தொடர்வதற்கான அனுமதியை திரும்பப் பெற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க:கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்; டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட் விடுத்த உத்தரவு..!

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்ந்தவரின் நேர்மை தன்மையை சோதிக்கும் வகையில் 1 லட்சம் ரூபாய் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா? 15 - 20 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவை எதிர்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா? என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க கோரி மனுதாரர் தரப்பில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரர் செலுத்திய ஒரு லட்சம் ரூபாயை திரும்ப வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details