வேலூர்: தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டமும் அடங்கும். இந்நிலையில், வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்பவர் 609 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்து தலைவரானார்.
தோளப்பள்ளி ஊராட்சி இம்முறை ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தலைவராக வெற்றி பெற்றுள்ள கல்பனா சுரேஷ் மாற்று சமுகத்தைச் சேர்ந்தவர் என்றும் தேர்தல் வேட்புமனுவில் போலியான ஆதிதிராவிடர் (SC) சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக தோளப்பள்ளி ஊராட்சியில் அதே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தார், அதி்ல் "ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் மாற்று சமூகத்தை சேர்ந்த கல்பனா சுரேஷ் என்பவர் முறைகேடாக போலியான ஆதிதிராவிடர் சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.