தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரி தொகுதியில் 26 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியானது, தஞ்சாவூர் , திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில், 7 லட்சத்து 27ஆயிரத்து 166 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 73 ஆயிரத்து 932 பெண் வாக்காளர்கள் மற்றும் 128 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 15 லட்சத்து, ஆயிரத்து 226 வாக்காளர்கள் உள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர். அவற்றில் தஞ்சை யாகப்பா நகரில் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹுமாயூன் கபீர் வாக்களித்துள்ளார். அதேபோல், தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தேமுதிக வேட்பாளர் சிவனேசன் தனது குடும்பத்தினருடன் வருகை புரிந்து தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர்.