சென்னை: கடந்த ஆண்டு வடக்கிழக்கு பருவ மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஏற்கெனவே வெள்ள நீர் சூழ வாய்ப்புள்ள வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கோவளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 10 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் புதிய முயற்சியாக படகுகள் மூலம் மீட்க முடியாத பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், ட்ரோன் மூலம் அத்யாவசியப் பொருட்களை வழங்குவதற்கான சோதனை முன்னோட்டம் இன்று நடைப்பெற்றது. சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் நடந்த ஒத்திகையை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளுக்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஈடிவி பாரத்திடம் பேசிய மாநகராட்சி அதிகாரிகள், "இந்த ட்ரோன்கள் மூலமாக பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த ட்ரோன்கள் 40 மீட்டர் உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறந்து பொருட்களை கொண்டு சேர்க்கும் திறன் கொண்டவை என கூறினர். இந்த ட்ரோன்களின் செயல்பாடுகள் சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில் இன்று பரிசோதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வேளச்சேரி மேம்பாலத்தில் மூன்றாவது நாளாக வரிசைக்கட்டி நிற்கும் வாகனங்கள்..உரிமையாளர்கள் கூறுவதென்ன?
மேலும், இந்த ஆய்வின்போது மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ. குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் டிரோன்களும் இந்த ஒத்திகையில் பங்கெடுத்தன.
கருடா நிறுவனத்தின் சிஇஓ அக்னிஷ்வர் ஜெயப்பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கையில், " எங்களின் திறன் மற்றும் தொழில்நுட்பத்தை சென்னையின் மீட்புப் பணிக்காக வழங்குவதில் பெருமை கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார். தங்களின் டிரோன்கள் பல்வேறு பேரிடர் மீட்புப் பணிகளில் செயல்பட்டு செயல்பாட்டுத் திறனை நிரூபித்துள்ளதால், தேவை உள்ள மக்களை சென்றடைவதில் குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை தங்களின் டிரோன்கள் ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் நேற்று பலத்த மழை பெய்தது. இன்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் விட்டு விட்டு மழை தொடர்கிறது. கரையை நெருங்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புதுச்சேரி நெல்லூர் இடையே நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலாக வலுப்பெறாது என்ற போதிலும் கரையைக் கடக்கும் போது மழையைக் கொடுக்கும் என்பதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: சென்னைக்கு தொடரும் ரெட் அலர்ட்.. எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் 20 செ.மீ.க்கு அதிகமான மழை பெய்யுமோ என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுளள்து. மழைக்காக மட்டுமே இந்த ரெட் அலர்ட் கொடுக்கப்படுவதில்லை எனவும், தாழ்வு மண்டலத்தால் ஏற்படும் பிற விளைவுகளுக்கும் சேர்த்து தான் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையை நோக்கி வரும்பொழுது 35 கிலோ மீட்டரிலிருந்து 45 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே, சோதனை முயற்சியாக திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள குமரன் காலனியில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு, முதல்முறையாக ட்ரோன் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்