சென்னை:அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்திற்குரிய நிதியினை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்பதால் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஆகையால், இன்று மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர் இயக்கங்கள் அறிவித்திருந்தன.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அமைச்சு பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறும்போது, "சமக்ர சிக்ஷ்சா அபியான் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு இந்த ஆண்டு ஒன்றிய அரசின் சார்பாக வழங்க வேண்டிய சுமார் ரூ.2,165 கோடி இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் செயல்பாடுகள் 60 சதவீதம் ஒன்றிய அரசின் நிதி மூலமாகவும், 40 சதவீதம் மாநில அரசின் நிதி மூலமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் அமையப் பெற்றுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையொப்பம் இடவில்லை என்பதால், இந்த ஆண்டுக்கான ஒன்றிய அரசு நிதியை வழங்க முடியாது என்று பிடிவாதமாக உள்ளது.
இதையும் படிங்க: பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!
இதனால், தற்பொழுது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றக் கூடிய சுமார் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் ஊதியம் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதி இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. மேலும், மாநில அரசின் நிதி பங்கீடான 40 சதவீதத்திலிருந்து ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகள் நடைபெற்று வந்த சூழலில் செப்டம்பர் மாதம் முதல் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை.
இதுவரையில் 2024 செம்பம்பர் மாதம் ஊதியம் பெறாமல் கிட்டத்தட்ட 25 ஆயிரம் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒன்றிய அரசின் நிதி வருவாயில் முதன்மை இடத்தில் உள்ள தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.