சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.
ஜூன் 1 ஆம் தேதி நியமிக்கப்பட்டவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8 ஆயிரத்து 370 என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 200 எனவும் உள்ளது. ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைக் களையக் கோரிக் கடந்த 12 ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர், நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில், வரிசை எண் 311ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெற்றிருந்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2023 புத்தாண்டின் முதல் அறிவிப்பாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.