சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில், "தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்" என்ற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பாஜக பொதுக்கூட்ட மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "பாஜக தொண்டர்கள் என்றாலே நல்லவர்கள் தான். 2026 சட்டமன்றத் தேர்தல் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த பொதுக்கூட்டம் சாட்சி. எதையும் எதிர்பார்க்காமல் தானாகச் சேர்ந்த கூட்டம். இக்கூட்டம் வருங்காலம் பாஜகவின் காலம் என்பதை வலியுறுத்துகிறது.
கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கட்டும் பார்க்கலாம்: ஆன்மீகத்தைப் பற்றி பேசாதவர்கள், சனாதனத்தை எதிர்த்தவர்கள் எல்லாம் இன்று முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டி இருக்கிறது. திமுக நடத்தும் முருகன் மாநாடு பாஜகவுக்கு வெற்றி. பெரியார் பெரியார் என்று சொல்லியவர்கள் இன்று முருகா முருகா எனக் கூப்பிடுகிறார்கள். ஆனால் முருகனுக்குத் தெரியும் யாருக்கு ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும் யாருக்கு ஆசீர்வாதம் கொடுக்க வேண்டாம் என்று.
தன் மாமன் ராமனுக்குச் செருப்பு மாலை அணிவித்தவர்களுக்கு முருகன் என்றும் ஆசீர்வாதம் கொடுக்க மாட்டார். முருகனை கொண்டாடவில்லை என்றால் 2026 சட்டமன்றத் தேர்தலில் வீட்டுக்குப் போக வேண்டிய நிலை வரும் என்பதை திமுக உணர்ந்துள்ளது. சமூக பாகுபாடற்ற முதலமைச்சர் ஸ்டாலின் என்றால் நாளை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தை முதலமைச்சரிடம் இருந்து தமிழகம் எதிர்பார்க்கிறது.
போர் நடக்கும் இடத்திற்கு தைரியமாகச் சென்று அமைதியை ஏற்படுத்துபவர் பிரதமர் மோடி. உலக அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு பிரதமர் மோடிக்கு தான் வழங்க வேண்டும். உலகை வழி நடத்தும் முன்னோடியாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். 74 லட்சம் பெண்களுக்கு 7,500 கோடியை ஒதுக்கி பெண்களுக்கு பாஜக அங்கீகாரம் வழங்கியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் ஏன் குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்படாத அறிக்கை நேற்று சென்றுள்ளது. மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகத்தின் விலையை ஏற்றியுள்ளனர்.