தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“மேய்ச்சலியம் குறித்து மாநில அரசு தவறான தகவல்”- மேய்ச்சலிய மையத்தின் நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு!

மேய்ச்சலியம் குறித்து மாநில அரசு பொதுமக்களிடமும் போதுமான தகவல்களை தருவதில்லை மேலும் தவறான தகவலை தருகின்றனர் என புதுதில்லி மேய்ச்சலிய மையத்தின் நிர்வாகி பிரியா கூறியுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 20 hours ago

மேய்ச்சல் மாடுகள்
மேய்ச்சல் மாடுகள் (Credits- ETV Bharat Tamil Nadu)

மதுரை:காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பல்வேறு விளைவுகளிலிருந்து பூமியை மீண்டும் இயற்கையின் சமநிலைக்கு கொண்டு வர 'மேய்ச்சலியம்' குறித்து உலகளவில் புரிதல் அவசியமானது என ஐ.நா. அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக 'தமிழ்நாடு மேய்ச்சலியம் 2024' மாநாடு மதுரை ஒத்தக்கடையிலுள்ள வேளாண் கல்லூரியில் நேற்று (அக்.18) தொடங்கி இன்று வரை நடைபெற்றது. இதில் அமைச்சர் பா.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. சேவா, நபார்டு, மதுரை வேளாண்மைக் கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மாநாட்டை இணைந்து நடத்தின. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பசுமை செயல்பாட்டாளர்கள் மற்றும் சூழலியல் அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

நிபுணர்கள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

மதுரையில் மேய்ச்சல் மாநாடு: இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள மேய்ச்சல் சமூக மக்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமன்றி 'மேய்ச்சல்' குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளும் அறிஞர்களும், ஆய்வாளர்களும் கலந்து கொண்டு பேசினர். இதுகுறித்து தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பின் மாநில தலைவரும், தேசிய மேய்ச்சல் சமூக இளைஞர் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான ராஜீவ்காந்தி கூறுகையில், “தமிழக வரலாற்றில் மேய்ச்சல் சமூக மக்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என மூன்று தரப்பினரும் பங்கேற்கும் முதல் நிகழ்வு இது.

மேய்ச்சல் உரிமைச் சிக்கல்:இங்கு மேய்ச்சல் சமூகம் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு வகையான சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியா முழுவதும் வாழக்கூடிய மேய்ச்சல் சமூக மக்கள் வனப்பகுதிகளுக்குச் செல்லும்போது எதிர்கொள்ளக்கூடிய மேய்ச்சல் உரிமைச் சிக்கல், பாரம்பரிய வன மேய்ச்சல் சட்ட உரிமைகள் குறித்து பேசப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள தோடர்கள், குரும்பாடு, கிடை ஆடு, மாடு, எருமைகளை வளர்க்கக்கூடிய மக்கள் அவர்களின் பிரதிநிதிகள் இங்கு பல்வேறு அமர்வுகளில் பேசினர்.

மேய்ச்சல் நல வாரியம் அமைத்தல்:இம்மாநாட்டின் முக்கியத் தீர்மானமாக மேய்ச்சல் சமூகத்திற்கென்று நல வாரியம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் எனவும் 2006 வன உரிமைச் சட்டத்தை மத்திய அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேய்ச்சல் சமூக மக்களுக்கான மனித உரிமைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள மேய்ச்சலியம் குறித்த அறிஞர்கள், ஆய்வாளர்கள், சமூக மக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

2026 சர்வதேச மேய்ச்சல் நிலம் ஆண்டு:மேலும் வருகின்ற 2026ஆம் ஆண்டை சர்வதேச மேய்ச்சல் நிலம் மற்றும் மேய்ச்சல் சமூக மக்களின் ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஆகையால் மேய்ச்சல் சமூக மக்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கவனத்திற் கொண்டு அவர்களுக்கான நலத்திட்டங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:மழை நீரில் மூழ்கிய 200 ஏக்கர் நெற்பயிர்கள்..கண்ணீர் சிந்தும் திருவள்ளூர் விவசாயிகள்.. அரசின் நிவாரணம் கிடைக்குமா?

மேய்ச்சல் நிலங்கள் குறித்து மாநில அரசு தவறான புரிந்துள்ளது:இதனை அடுத்து புதுதில்லியைச் சேர்ந்த மேய்ச்சலிய மையத்தின் நிர்வாகி பிரியா கூறுகையில், “தமிழ்நாட்டிலுள்ள மேய்ச்சல் சமூக மக்கள் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் உள்ள மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேய்ச்சல் சமூகம் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் குறித்து மாநில அரசு பொதுமக்களிடமும் தவறான தகவல்கள் நிறைந்துள்ளன. அவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த மாநாடு உணர்த்தியுள்ளது.

மேய்ச்சலியம் சார்ந்து இங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனச் சட்டத்தை 15 ஆண்டுகள் கடந்தும்கூட இதுவரை அமலாக்கப்படவில்லை. ஆகையால் இதனை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.

மாநாட்டில் நிறைவேற்ற தீர்மானங்கள்:

  • தேசிய மேய்ச்சல் நில கொள்கையை உருவாக்குதல்.
  • வலசை வழித்தடங்களை ஆவணப்படுத்தி அங்கீகரித்தல்.
  • மேய்ச்சல் சமூகத்தின் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்துதல்.
  • ஊரக வேலைத் திட்டத்தில் மேய்ச்சல் சமூகத்திற்கு தனி நிதி ஒதுக்குதல்.
  • புறம்போக்கு தரிசுநிலங்களை மேய்ச்சல் நிலங்களாக வகைப்படுத்தல்.
  • கால்நடைத்துறையின் கீழ் மேய்ச்சல் பிரிவு ஒன்று துவங்குதல்.
  • உள்ளூர் கால்நடை இனங்களைப் பாதுகாத்தல்.
  • தமிழக அரசு மேய்ச்சல் பொருளாதார மேம்பாட்டு வாரியம் உருவாக்குதல்.
  • மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கென்று நெடுஞ்சாலைகளிலும், ரயில் தண்டவாளம் குறுக்கிடும் பகுதிகளிலும் குறுக்குப் பாதைகள் மற்றும் தனி சுரங்கப்பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details