சேலம்: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகி இருந்த வாக்குகள் மொத்தம் 12,95,702. இவை ஓட்டுச்சாவடி முறையே, சேலம் வடக்கு 19 சுற்று, தெற்கு 20 சுற்று, மேற்கு, வீரபாண்டி தலா 22 சுற்று, எடப்பாடி 23, ஓமலூர் 26 சுற்று என்று எண்ணி முடிக்கப்பட்டன.
திமுக சார்பில் வெற்றி பெற்ற டி.எம்.செல்வகணபதி அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்த மாவட்டத்தில் முக்கிய பகுதியான எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அவருக்கு 77 ஆயிரத்து 522 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. மற்ற 5 சட்டமன்றத் தொகுதிகளில் அவர் பெற்ற வாக்குகளை விட இதுவே மிகவும் குறைவு. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி என்பதால், அங்கு அதிமுக வேட்பாளர் விக்னேஷ், திமுகவை விட 46,320 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இது மட்டுமே அதிமுகவுக்கு சற்று ஆறுதல் எனக் கூறலாம்.
அதேபோல, விக்னேஷ் தனது சொந்த தொகுதியான ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுகவை விட 3,553 வாக்குகள் குறைவாகவே பெற்றார். வீரபாண்டி தொகுதியில் 78,695 வாக்குகள் பெற்ற அவருக்கு, சேலம் மேற்கில் அதைவிட 4,748 வாக்குகள் குறைவாகவே கிடைத்தன. அதை விட தெற்கில் 9,169 வாக்குகள், வடக்கில் 9,045 வாக்குகள் குறைவாகவே பெற்றார். தபால் வாக்குகளிலும் திமுகவை விட 1,293 வாக்குகள் குறைவாகவே பெற்றார். இந்நிலையில், எடப்பாடி தவிர 5 தொகுதிகளிலும் கணிசமான அளவில் வாக்குகள் இழந்து, அதிமுக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், திமுகவின் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிகபட்சமாக 1,03,830 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும், மத்திய மாவட்டத்தில் உள்ள ஓமலூர், சேலம் மேற்கு, வடக்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவை விட அதிக வாக்குகளை செல்வகணபதி பெற்றுள்ளார்.
வேட்பாளர்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள்
1. டி. எம்.செல்வகணபதி (திமுக):
ஓமலூர் - 99,519
எடப்பாடி - 77,522
சேலம் மேற்கு - 95,935
சேலம் வடக்கு - 96,039
சேலம் தெற்கு - 89,177
வீரபாண்டி - 1,03,830
தபால் ஓட்டு - 4,063
மொத்தம் - 5,66,085
2. விக்னேஷ் (அதிமுக)
ஓமலூர் - 95,966
எடப்பாடி - 1,23,842
சேலம் மேற்கு - 73, 947
சேலம் வடக்கு - 55,731
சேலம் தெற்கு- 64, 777
வீரபாண்டி - 78, 695
தபால் வாக்குகள் - 2,770