சென்னை:விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள், நோய் கடத்திகள் மூலம் பரவும் நோய்கள், வெப்ப தாக்கம் தொடர்பான நோய்கள், காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் மற்றும் நீர் மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை புவியியல் ரீதியாக பரவுவதை அறிந்துக்கொள்வதற்காக ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் (One Health and Climate Hub) அமைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசாணை
தமிழக சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில், ஒருங்கிணைந்த நல்வாழ்வு என்பது, மக்கள், விலங்குகள் மற்றும் சூழலியல் அமைப்புகளின் நல்வாழ்வை சமநிலைப்படுத்துவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஓர் ஒருங்கிணைந்த மற்றும் ஓரலகுக் கட்டமைப்பு என உலக சுகாதார நிறுவனம் (WHO) வரையறுத்துள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் முன்னோடியாக உள்ள மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, வெப்பநிலை அதிகரிப்பு, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் பெருந்தொற்றுகள், நோய்க்கடத்திகள் வாயிலாகப் பரவும் நோய்கள், கடலோரப்பகுதிகளின் பாதிப்புகள் மற்றும் பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு ஏற்படும் இழப்பு உள்ளிட்ட தனித்தன்மை வாய்ந்த பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக, பழங்குடியினர் வாழும் பகுதிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் அதிக இடர்பாடுகளை எதிர்கொள்ளும் பகுதிகள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் சமூகத்தினரின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கு ஒருங்கிணைந்த மற்றும் முன்னெச்சரிக்கை வாய்ந்த அணுகுமுறை அவசியமாகிறது.
இதையும் படிங்க:மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரம்: குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி!
காலநிலை மாற்றம் மற்றும் மக்கள் நலனுக்கான தேசிய திட்டத்தின் (NPCCHH) இலக்குகளை எதிர்கொள்வதற்கான தமிழ்நாட்டின் உறுதியான
முயற்சிகளுடன் இணைப்பதன் மூலமாக சம அளவிலான வளர்ச்சியை பேணுவதில் இந்த மையம் முக்கிய பங்காற்றும்.
ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம்
காலநிலை மாற்றத்தால் உருவாகும் உடல்நல பாதிப்புகளுக்குத் தீர்வு காண்பதற்கான கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை உருவாக்கும்.
கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சியை வலுப்பெற செய்யும்
காலநிலை மாற்றத்தால் உருவாகும் நோய்களைக் கண்காணிப்பதற்காக, மாநில அளவிலான உறுதியான கண்காணிப்பு, தரவு அமைப்பு முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஏற்பாட்டு முறைகளை உருவாக்கும்.