திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் சில காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் அப்போதைய சார் ஆட்சியர் முகமது சபீர் கடந்தாண்டு மார்ச் 26 ஆம் தேதி தனது விசாரணை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து எஸ்.பி பல்வீர் சிங் மார்ச் 29ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கானது ஏப்ரல் 20ம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
வழக்கு விசாரணை:இந்த வழக்கை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் ஏடிஎஸ்பி சங்கர் ஆகியோர் மேற்கொண்டனர். இதனையடுத்து திருநெல்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 14 காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மீது இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் 4 வழக்குக்களில் பல்வீர் சிங்கும், இரண்டு வழக்குகளில் ஆய்வாளர் ராஜகுமாரியும் உதவி ஆய்வாளர்கள் முருகேஷ் மற்றும் ஆபிரகாம் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றனர். இதனையடுத்து பல்வேறு சாட்சியங்களை நேரடியாகவும் காவல் நிலையத்திற்கும் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகள் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்தாண்டு டிசம்பர் 15ம் தேதி முதல் முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஏஎஸ்பி பல்சர் உட்பட வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகினர்.
இந்த நிலையில் பற்களைப் பிடுங்கிய விவகாரம் தொடர்பாகத் தமிழக டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த வாரம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்காததால் டிஜிபி நேரில் ஆஜராகும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.