சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மூத்த அரசியல் தலைவருமான சீதாராம் யெச்சூரி (72) உடல்நல குறைவால் இன்று (செப்., 12) காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாச தொற்று பிரச்சனையால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த யெச்சூரி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், சீதாராம் யெச்சூரியின் உடல் ஆராய்ச்சி நோக்கத்துக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழக ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவரும், நடிகருமான விஜய், ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ரவி: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் தள பதிவில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்திய அரசியலில் அவர் வழங்கிய தாக்கம் நிறைந்த பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், ''இடதுசாரி இயக்கத்தின் தலைவரும், இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர், சிறு வயதிலிருந்தே, மாணவர் தலைவராக தைரியமாக எமெர்ஜென்சிக்கு எதிராக நின்று, நீதிக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளித்தது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்'' என தெரிவித்துள்ளார்.