தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து தீர்மானம்! - Tamil Nadu Congress Committee - TAMIL NADU CONGRESS COMMITTEE

சென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டத்தில், மத்திய அரசை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 8:04 PM IST

சென்னை: சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அவற்றில் சில பின்வருமாறு;

  • கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழில் முனைவோரிடையே நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை குறித்து பாரம்பரியமிக்க அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கேள்விகளை சகித்துக் கொள்ள முடியாமல் மிகுந்த ஆணவத்தோடு நடந்து கொண்டதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
  • முத்ரா கடன் வழங்கியது குறித்த புள்ளி விவர மோசடியை நிகழ்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே, பா.ஜ.க.வினரின் இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரங்களை, சமூக ஊடகங்களின் மூலமாக காங்கிரஸ் கட்சியினர் முறியடிக்கிற வகையில் அவ்வப்போது பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.
  • மத்திய பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக மாநில நலன்களும், உரிமைகளும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, மொத்த நிதி ஒதுக்கீட்டில் உத்தரபிரதேசம் 18 சதவிகிதம், தமிழ்நாடு 4 சதவிகிதம், கர்நாடகம் 3 சதவிகிதம், தெலுங்கானா 2 சதவிகிதம், கேரளா 1 சதவிகிதம் என நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தென்மாநிலங்களை வஞ்சிக்கிற அணுகுமுறையை பாஜக மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பாரபட்ச போக்கை வன்மையாக கண்டிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:திமுக கூட்டத்தில் பிரியாணிக்காக நடந்த அடிதடி!

  • 2024-25 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாட்டிற்கு ரூ.3,586 கோடி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த தொகையில் மத்திய அரசின் 60 சதவிகித பங்களிப்பான ரூ.2,152 கோடியை ஜூன் மாதம் விடுவித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை விடுவிக்காததால் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் தமிழக கல்வித்துறை இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறுவது கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பதாக உள்ளது.
  • சென்னை மாநகரில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு ரூ.63,246 கோடி இதன் மொத்த சுமையையும் தமிழ்நாடே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நியாயப்படுத்தி பேசியது அவரது ஆணவப் போக்கையே வெளிப்படுத்துகிறது. இதைப் போலவே தொடர்ந்து அனைத்து நிலைகளிலும் மோடி அரசு தமிழ்நாட்டை புறக்கணித்து வஞ்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கப்படுகிறது.
  • மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதி வாரிக் கணக்கெடுப்பையும் உடனடியாக நடத்த வேண்டுமென இக்கூட்டம் மத்திய பாஜக அரசை கேட்டுக் கொள்கிறது.
  • தமிழகத்திற்கென கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அதே நேரத்தில், அரசமைப்புச் சட்டத்தில் பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  • வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மத நல்லிணக்கத்தோடு அரசமைப்புச் சட்டப்படி செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கிற வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் அறிமுகம் செய்திருப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
  • காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி நடத்தப்படும் பாதயாத்திரைகளில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் அந்தந்த பகுதிகளில் பங்கேற்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details