சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எழுதிய முரசொலியின் மடியில் தவழ்ந்தவை, மேடையெனும் வசீகரம், கேளுங்கள் சொல்கிறேன், எதிர்பாராத திருப்பம், காட்சியும் கருத்தும், ஆகிய நூல்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது விழா மேடையில் பேசிய முதலமைச்சர், "எண்பதுகளின் தொடக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக இளைஞரணியைத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கியபோது, 5 பேரை முதலில் அமைப்பாளர்களாக நியமித்தார்.
நான் முதலாவது, இரண்டாவது திருச்சி சிவா. மிசா என்.சிவா என்ற பெயரை 'திருச்சி சிவா' என்று மாற்றியவர் கருணாநிதி. அப்போது நாங்கள் முப்பதுகளை தொட்ட இளைஞர்களாக இருந்தோம். இன்று எழுபதுகளைத் தொட்டும் தொய்வில்லாமல் பணியைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இளைஞர்களாக இருக்கிறோம்.
எங்களை என்றும் இளமையாக இயக்குவது, நம்முடைய கட்சி. கறுப்பு சிவப்பு கொடி, தலைவர் கருணாநிதி, இந்த மூன்றும் இல்லையென்றால் நாங்கள் இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது. கருணாநிதி அவர்கள் இன்று இருந்திருந்தால் வெளியிடப்பட்டிருக்கக் கூடிய 5 புத்தகங்களுக்காக நம் சிவா அவர்களை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்.
தலைவர் கருணாநிதிக்கு, எப்போதும் சிவா அவர்களின் பேச்சு என்றால் மிகவும் பிடிக்கும். மாநிலங்களவை பேச்சுகளுக்காக அடிக்கடி பாராட்டுவார். இப்படி சிறப்பான பாராட்டுகளைப் பெற்ற திருச்சி சிவா எழுதியிருக்கும் நூல்களின் தலைப்பே சிவா அவர்களைப் பற்றி சொல்லும்.
- எதிர்பாராத திருப்பம் - சிவாவின் சிறையைச் சொல்கிறது.
- மேடையெனும் வசீகரம் - சிவாவின் மேடையைக் காட்டுகிறது.
- கேளுங்கள் சொல்கிறேன் – அவரின் வாதமாக இருக்கிறது.
- முரசொலியின் மடியில் தவழ்ந்தவை – அவரின் எழுத்தோவியமாக இருக்கிறது.
- காட்சியும் கருத்தும் – கலை, இலக்கியமாக இருக்கிறது.
அந்த வகையில், மேடை, எழுத்து, சிறை, வாதம், கலை, இலக்கியம் என்ற சிவா அவர்களின் ஐந்து முகங்களையும் வெளியிடும் மேடை இது. சிவா தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, அரசியல்வாதிக்குள் இருக்கும் இலக்கியவாதி என்று சொல்லுவார். அதற்கு ஏற்றாற்போல், இவை அரசியல் புத்தகங்களாக மட்டுமல்ல, அரசியலுக்கு வெளியில் இருப்பவர்களும் படிக்கும் இலக்கிய நூல்களாகவும் அமைந்திருக்கிறது.
நம் திருச்சி சிவா அவர்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இளைஞரணியைத் தொடங்கிய காலத்தில் ஐவரில் ஒருவர். அதன்பிறகு 10 ஆண்டுகாலம் இளைஞரணியின் துணைச் செயலாளர். 15 ஆண்டுகாலம் மாநில மாணவரணிச் செயலாளர். இப்போது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் என்று கட்சிப் பணியில் தன்னுடைய உழைப்பால் உயரங்களை அடைந்தவர்.
மக்கள் பணி : புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி மூலமாக மக்களவைக்கு ஒருமுறையும், இப்போது நான்காவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமல்ல, திமுகவின் முகமாக மாநிலங்களவைக் குழுத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றத்தைப் பொருத்தவரை, 526 விவாதங்களில் பங்கேற்று 790 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதனால்தான் ஆளும் தரப்பு, சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது என்று அச்சம் கொள்கிறது.
அது மட்டுமல்ல, தொழில் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக ஏழு அறிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறார். ஒன்பது தனி நபர் மசோதாக்களையும், இரண்டு தனி நபர் தீர்மானங்களையும் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய சாதனைகளுக்கு மகுடம் வைப்பதுதான் திருநங்கைகள் உரிமைகள் மசோதா - 2014.
45 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனி நபர் மசோதா நிறைவேற்றப்பட்டது மாபெரும் சாதனை. இன்றைக்கு யுபிஎஸ்சி தேர்வுகளில் இது ஒரு கேள்வியாகக் கேட்கப்படுகிறது.