சென்னை: தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம் காமராஜபுரத்தில் செயல்பட்டு வருகிறது. மண்டல குழு தலைவராக ஜெயபிரதீப் என்பவர் உள்ளார். இந்த மண்டலத்தில் உதவி செயற்பொறியாளராக ரகுபதி (58) மற்றும் இளநிலை பொறியாளராக பழனி (58) என்பவர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் உதவி செயற் பொறியாளர் ரகுபதியிடம் தகராறில் ஈடுபட்ட ஜெயபிரதீப், அறையில் இருந்து ரகுபதியை வெளியேற்றி விட்டு, அந்த அறைக்கு பூட்டு போட்டுள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்களை அறையின் வெளியில் நிறுத்தி வைத்து, அலுவலகத்தினுள் செல்ல முடியாதவாறு நின்று கொண்டிருந்தனர்.
இதனால் அலுவலகப் பணி செய்ய முடியாமல் முடக்கப்பட்டதால், இது குறித்து செயற்பொறியாளர் ஞானவேலிடம் இருவரும் புகார் தெரிவித்துள்ளனர். அதன்படி, பூட்டிய அறையைத் திறக்க மாநகராட்சி செயற் பொறியாளர் ஞானவேல் சென்ற நிலையில், ஜெயபிரதீப் குறுக்கிட்டு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஞானவேல் மாநகராட்சி அதிகாரிகள் மண்டலக்குழுத் தலைவர் ஜெயபிரதீப் மீது சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க:"அது எப்படி சரியாகும்?”.. தமிழிசைக்கு திருமாவளவன் கேள்வி!
புகாரின் பேரில் மண்டல குழுத் தலைவர் ஜெயபிரதீப் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை நிறைவுபெற்ற நிலையில், மண்டலக் குழு தலைவர் ஜெயபிரதீப் காவல் நிலைய பிணையில் இருந்து விடுவிக்கபட்டுள்ளார்.
இது குறித்து மாநகராட்சி பொறியாளர்களை தொடர்பு கொண்ட நிலையில், “ஏன் அலுவலகத்தை பூட்டினார் என்பது தெரியவில்லை. மண்டலக் குழு தலைவர் ஜெயபிரதீப் திமுகவில் சீட் கொடுக்கவில்லை என்பதால் தனித்து நின்று வெற்றி பெற்று, அவருடைய ஆதரவாளர்கள் மூலம் மண்டல குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தனித்து போட்டியிட்டதால் திமுகவில் இருந்து விலகி தனித்து செயல்பட்டு வருகிறார். தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார்” இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்