சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியானது இன்று காலை11.00 - 1.00 மணி வரை நடைபெற்றது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் விமானம் உள்ளிட்ட விமானங்கள் சாகசத்தில் பங்கேற்றன. இந்த விமானங்கள் வானில் வட்டமிட்டும், செங்குத்தாக பறந்தும், இந்திய தேசியக் கொடி நிறத்தை புகைகள் மூலம் வெளியிட்டது என பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தின.
இந்நிலையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தாம்பரம் விமானப்படை தளத்தின் குரூப் கேப்டன் நக்கீரன் பரனன் அளித்த சிறப்புப் பேட்டியில், "மக்களின் கால் தடத்தால் சென்னை அதிர்ந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இதுபோன்ற நிகழ்வைப் பார்த்தது இல்லை. இதனைப் பார்த்து விழிப்புணர்வு ஏற்பட்டு உலகின் 4வது பெரிய விமானப் படையில் ஒரு அங்கமாகி சேவை செய்ய முன் வர உந்து சக்தியாக இருக்கும்.
விமானப் படையில் தேவையான அளவு ஆட்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இந்த சாகச நிகழ்ச்சி மூலமாக தமிழகத்திலிருந்து இந்திய விமானப் படையில் சேருபவர்களின் எண்ணிக்கை சதவிகிதம் அதிகமாகும்" என தெரிவித்தார்.
இதேபோல் இந்திய விமானப் படை சாகசத்தை பார்த்த சிறுவர், சிறுமியர்கள் கூறுகையில், "இதுபோன்ற வான் சாகச நிகழ்ச்சியை நாங்கள் பார்த்தது இல்லை. பார்ப்பதற்கு மிகவும் மகிழ்சியாக இருந்தது. விமானம் வட்டமிட்டு சென்றது. விமானம் வானில் இதயத்தை வரைந்து சென்றது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. மின்னல் வேகத்தில் மிகவும் நெருக்கமாக விமானங்கள் பறப்பதை பார்த்த உடன் தாங்களும் இதே போல் விமான படையில் இணைந்து வானில் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது" என தெரிவித்தனர்.