தஞ்சாவூர்:இந்திய துணை கண்டத்தில் முற்கால சோழர்களால் கட்டப்பட்ட பழமையும், புராதனமும் கொண்ட திருக்கோயில்களில் ஒன்று கும்பகோணம் பெரியநாயகி சமேத நாகேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் நாகதோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
சூரிய பூஜை:சூரியன் தனது ஒளிமங்கி அமாவாசை சந்திரனைப் போல கலங்கி நின்ற போது, அசரீரியின் கூற்றுப்படி சூரிய தீர்த்தத்தை உண்டாக்கி, அதில் நீராடி ஸ்ரீ நாகேஸ்வரரை வழிப்பட்டதால் தன் சாபம் நீங்கப்பெற்றார் எனவும், அது முதல் ஆண்டுதோறும் தமிழ் மாதம் சித்திரை 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களை இறைவன் மீது படரச்செய்து பூஜிக்கும் அழகு கண்கொள்ளா காட்சியே சூரிய பூஜையாகும் எனவும் கூறப்படுகிறது.
இதன்படி, ஆண்டுதோறும் குறிப்பிட்ட இந்த 3 நாட்களில் மட்டும் இத்தகைய சூரிய ஒளிக்கதிர்கள் மூலஸ்தானம் வரை சென்று சிவலிங்கத்தின் மீது விழும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, பல தலைமுறைகளைக் கடந்து இன்றளவும் சோழர் கால கட்டிடக் கலைக்கு மிகப்பெரிய சான்றாகவும் பெருமை சேர்த்து வருகிறது.
இத்தலம், சூரியனுக்கு இறைவன் ஒளி கொடுத்ததால் கும்பகோணம் நகருக்கு பாஸ்கரசேத்திரம் என்ற பெருமையும் உண்டு. இங்குள்ள நடராஜர் சபை, ரதம் போன்ற அமைப்பு உடையது 8 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன கருங்கல் சக்கரத்தில் சூரியனின் 12 பெயர்களும் சின்னமாக பொறிக்கப்பட்டுள்ளது.